இன்றைக்கு அதிகம் பொதுமக்களால் கேள்விக்கு உள்ளாவது கிராம ஊராட்சிகள் தான் என்றால், அது மிகையல்ல. ஒவ்வொரு கிராம ஊராட்சி சம்பந்தப்பட்டும் மக்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலம் கேள்விகள் கேட்டபடியே உள்ளனர். இது ஒருவித அடுத்தக் கட்ட நகர்வு என்றாலும், எங்கே, எப்படி, எவ்வாறு, யாரை கேள்வி கேட்க வேண்டும் என்பதில் கொஞ்சம் திணறவே செய்கிறார்கள்.
கிராம ஊராட்சியில் இருக்கும் ஒருவர், அரசாங்கத்தின் நிதியுதவியோ அல்லது திட்டங்களோ தனக்கு மட்டும் வந்து சேரவில்லை என்று கருதுகிறார். யாரோ அதிகாரம் பெற்ற ஒருவரின் காழ்ப்புணர்ச்சியால் வரவில்லை என்று கருதுகிறார். அப்போது, எவ்வாறு அந்த ஆவணங்களைக் கேட்டுப் பெற்று, எவ்வாறு அணுகுவது என்கிற பார்வையே மிகப் பெரிய அறிவை அனுபவத்தைக் கொடுக்கும்.
இதை இந்தப் புத்தகம் ஒரு பாதிக்கப்பட்டவரின் பார்வையிலிருந்தும் பேசுகிறது.
அதே வேளையில், ஊராட்சியில் வரும் நல உதவிகள், திட்டங்கள், வரவுகள், செலவீனங்கள் என்னென்ன என்கிற பொதுவாக தெரிந்து கொள்ள வேண்டும் என எண்ணும் ஒரு கிராம ஊராட்சியின் பொது ஜனமாகவும் நின்று தெரிந்து கொள்ள கைக் கொடுக்கிறது இந்தப் புத்தகம்.
நம் எண்ணத்தில் வருபவையையெல்லாம் எழுத்தாக்கி, தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலம் கேள்விகள் கேட்டால் அது கேள்விகள் கேட்டவருக்கு வரும் சிக்கல்களையும் இப்புத்தகம் பேசாமல் இல்லை.
ஒரு உதாரணமாக, 2020 முதல் நாளது தேதி வரை உள்ள வரவு செலவுப் பதிவேடுகளை தருக.. என ஒன்றைக் கேள்விக்கு, விடை நான்காயிரம் பக்கமாக இருக்கலாம். அதற்கு கட்டணம் ரூ.8000/& செலுத்தி நாம் பெற்றுக் கொள்ளும் சூழ்நிலை நிலவலாம். அதனால் மனம் போன போக்கில் கேள்விகள் இருக்கக் கூடாது என தெளிவுரை தருகிறது இந்தப் புத்தகம்.
கிராம ஊராட்சியில் தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலம் கேள்வி கேட்க ஏதுவாக நிறைய மாடல்கள் தரப்பட்டுள்ளது. கட்டண விவரங்கள், குறிப்புகள், சட்ட நுணுக்கங்கள் என அடுக்கிக் கொண்டே போகிறது.
கிராம ஊராட்சியில் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் தனக்கான அடுத்தக் கட்டத்தை அடையவதாக இருக்கட்டும், கிராம ஊராட்சிகளின் ஒவ்வொரு நகர்வையும் தெரிந்து கொள்வதாகட்டும் இந்தப் புத்தகம் பெரிதும் உதவி செய்யும் எனில் அது மிகையல்ல.
எளிய மக்களின் பார்வையில் நின்று, எளிய தமிழில் பேசும் நல்ல புத்தகம்.