‘தர்பூசணியில் கலப்படம் இருக்கு.. அது என்னய்யா ஆப்பிள் பழத்துல மெழுகு தடவி கிடக்கு.. மாம்பழத்தை கல் போட்டு பழுக்க வச்சிருக்காங்க..’’
‘‘ஏப்பா இது என்ன ஹோட்டல் கடை சுத்த பத்தம் இல்லாமல் இருக்கு.. அது என்ன குடிச்ச டீ டம்ளரை ஒரே தண்ணியிலேயே கழுவுற..பரிமாறுகிற ஆட்கள் ஏன் தலையில கேப் இல்லாமல் இருக்காங்க.. உணவுல முடி விழுகாதா. வடை சுடுற எண்ணெய் அசுத்தமா இருக்கு. வாடிக்கையாளர் போகும் கழிப்பிடம் கேவலமாக இருக்கு. ஹோட்டலுக்குள்ள எலி ஓடுது’’
‘‘ ஏப்பா.. இப்ப மான் மார்க் பொயலை மட்டும் இல்லை.. தலைப்பொயலையும் போதைப் பொருள் லிஸ்டுல வந்துடுச்சு. பொடிக் கூட போதைப் பொருள் தான்யா.. ஏப்பா கடைக்காரரே பாக்கெட்டை காட்டு. ஹான்ஸ், பான்பராக் விற்குறியா.. கூல் லிப்பை எங்க மறைச்சு வச்சருக்க..?’’
நிற்க..
இன்றைக்கு ஹீரோ என்றால், அவர்கள் உணவு பாதுகாப்புத் துறையினர் தான். சும்மா வளைச்சு வளைச்சு மக்களை பாதுகாக்க என்னமா உழைக்கிறாங்க.
போலீஸ்காரங்க கூட பத்தடி தான் பாயுவாங்க போலிருக்கு.. இவங்க சும்மா பதினாறு அடி பாயுறாங்க.
சமூக வளைத் தளங்களின் தாக்கத்தால் இவர்கள் செய்யும் அலப்பறைகளால் அதகளப் படுகிறது சமூகம்.
திடீரென கடைக்குள் நுழைவது. ஒருமையில் பேசுவது. மிரட்டுவது. அபராதம் விதிப்பது. வழக்கு போடுவது என எக்கச்சக்க சிக்கலில் வியாபாரிகள் இருப்பது உண்மை.
போலீஸ் என்றால் அவர்களுக்கு சீருடை இருக்கும். பொதுமக்களால் அடையாளம் காண இயலும்.
இவர்களுக்கு சீருடையும் இல்லை. அதனால் யார் வருகிறார்கள். யார் மிரட்டுகிறார்கள். யார் உண்மையான அதிகாரிகள்? யார் போலிகள் என ஒன்றுமே புரியவில்லை.
உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உண்மையில் என்ன அதிகாரம் இருக்கிறது? அவர்கள் எவ்வளவு அபராதம் விதிக்க இயலும்? எப்படி வழக்கு தொடுக்க இயலும்? ஒரு வியாபாரி முதல் முறை தவறு செய்தால் எவ்வளவு அபராதம்? இரண்டாம் முறை அதே தவறை செய்தால் என்ன அபராதம்? மூன்றாம் முறை தொடர்ந்து செய்தால் என்ன அபராதம்? கடைக்குள் அத்துமீறி உணவு பாதுகாப்புத் துறையினர் நுழையலாமா?
உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இலஞ்சம் வாங்கினால் என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது? பான்மசாலா, குட்கா போன்ற தடைசெய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்தால் கடைகளுக்கு எத்தனை நாட்கள் சீல் வைப்பார்கள்.. என்ன நடவடிக்கைக்கு அது மேலும் போகும்..
இப்படி எண்ணற்ற தகவலை ஒரு வியாபாரி மட்டுமல்ல.. சாதாரண பொதுமக்களும் அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் இன்றைய நிலைக்கு உள்ளது. கல் போட்ட பழங்களை விற்கக் கூடாது. தடை செய்யப்பட்ட பொருட்களை விற்கக் கூடாது. இதில் மாற்றுக் கருத்து இல்லை. யாருக்கும் இருக்கவும் முடியாது. ஆனால், இந்த தவறு செய்த வியாபாரியை அதிகாரி எவ்வாறு அணுக வேண்டும் என்கிற ஒரு முறை இருக்கிறது அல்லவா? அது என்ன முறை.. இதை தெரிந்து கொள்ள வேண்டும்.
உணவு பாதுகாப்புத் துறையின் அதிகாரங்கள், தரக் குறைவுக்கான தண்டனைகள், கலப்படப் பொருளுக்கான தண்டனைகள், பாதுகாப்பற்ற உணவுக்கான தண்டனைகள், பொய்த் தகவலுக்கான தண்டனைகள், தீர்ப்புகள், மேல் முறையீடுகள் இப்படி எக்கச்சக்க விளக்கங்களை இந்த நூல் தருகிறது. ஒவ்வொரு வியாபாரிகள் மட்டுமல்ல அனைவர் வீட்டிலும் இருக்க வேண்டிய நூல்..